• Wed. Oct 16th, 2024

முருகனை எனக்கு பிடிக்கும் திருமண விழாவில் ஸ்டாலின் சிலேடை

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்துக்கு திமுக தலைவரை பார்க்க வரும் கட்சியினர், பொது மக்கள், விஐபிகள் என யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று அமர வைத்து அவர்களிடம் என்ன ஏதென விசாரித்து வைத்திருப்பார். கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்ததும் அவரையும் வரவேற்று… இன்னார். இன்ன விஷயத்துக்காக உங்களை சந்திக்க வந்திருக்கிறார்கள் என்று முன் தயாரிப்பு செய்பவர் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன்.
இன்று (23.01.2022) காலை அண்ணா அறிவாலயம் வந்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை தலைமை நிலையச் செயலாளர் என்ற வகையில் மட்டுமல்ல மணப்பெண்ணின் தந்தை என்ற வகையிலும் வரவேற்றார் பூச்சி முருகன்.இன்றுதிமுக தலைமை நிலையச் செயலாளரான பூச்சி முருகனின் மகள் அருணாவுக்கு திருமணம். இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.இன்று மகளுக்கு திருமணம் நடைபெறும் நிலையில், அந்தக் கொண்டாட்டத்தை மேலும் மகிழ்ச்சிகரமாக்க, நேற்று (ஜனவரி 22) தமிழக வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சி முருகனை நியமித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.இந்தக் கொண்டாட்டம் இன்று நடைபெற்ற பூச்சி முருகன் மணவிழாவிலும் எதிரொலித்தது.


ஆளுங்கட்சியானாலும் எதிர்க்கட்சியானாலும் அறிவாலயத்தில் பூச்சி முருகன் எந்நேரமும் இருப்பார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் திமுகவின் சொத்துகளும்,திமுகவினரும் குறிவைத்து தாக்கப்பட நிலையில் அறிவாலயத்தில் இருந்து அரண் போல காத்தவர் பூச்சி முருகன். சில சமூக விரோதிகள் அறிவாலயத்தினுள் குண்டுகளை வீசினார்கள். அந்த குண்டுகள் வெடிக்கலாம் என்று பலரும் பயந்த நிலையில் அந்த குண்டுகளை தனது ஸ்கூட்டரில் எடுத்துச் சென்று கூவம் ஆற்றில் போட்டுவிட்டு வந்தவர் பூச்சி முருகன்.
அறிவாலயத்தில் தலைமைக் கழகம் நடத்தும் அத்தனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் செய்வது பூச்சி முருகன்தான். சில சமயம் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் சில நடைமுறைகளை மாற்றச் சொன்னபோது கூட, ‘இல்லங்க தலைவரேதான் இப்படி பண்ண சொல்லியிருக்காரு’ என்று தைரியமாக சுட்டிகாட்டுபவர் பூச்சி முருகன். அறிவாலயத்தில் மாசெக்கள் கூட்டம் நடக்கும்போது கூட இன்றைக்கும் இருக்கும் சீனியர் மாசெக்களை விட சீனியரான பூச்சி முருகனும் இடம் பெற்றிருப்பார்” இந்த நிலையில் இன்று (ஜனவரி 23) பூச்சி முருகனின் மகள் திருமண விழாவை முழு ஊரடங்கு நாளில் நடத்தி வைத்து ஸ்டாலின் பேசும்போது,

“இந்தத் திருமணம் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா தொற்று நோய் நாடு முழுதும் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றி நடந்துகொண்டிருக்கிறது. இதுவே கொரோனா காலமாக இல்லாதிருந்தால் அறிவாலயத்தில் இடமே இல்லை என்ற அளவுக்கு கூட்டம் திரண்டிருக்கும்.பூச்சி முருகனின் தந்தையார் மறைந்த சிவசூரியன் அவர்கள் தலைவர் கலைஞரிடத்திலே நெருக்கமாக இருந்தார். அவரது திருமணத்தை அண்ணா தலைமை தாங்கி நடத்தி வைக்க கலைஞர் முன்னிலை வகித்தார். சிவசூரியன் திரைப்படத்தில் மட்டுமல்ல கழகத்தின் பல நாடகங்களில் நடித்துள்ளார்.நானே அறிவாளி’ என்ற நாடகம், தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன் அவரே அந்நாடகத்தில் நடித்தார். அவர் ஆட்சிக்கு வந்த பின் அந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் சிவசூரியன் நடித்தார். தமிழகம் முழுதும் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் அண்ணாவின் நண்பர் சி.வி. ராஜகோபால் நாரதர் வேடத்தில் நடித்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் நடிக்க இயலாமல் போன நிலையில் நாரதர் வேடத்தில் நான் தான் நடித்தேன். பூச்சிமுருகனின் தந்தையாரோடு நான் இணைந்து நடித்திருக்கிறேன்” என்று பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்த ஸ்டாலின்மணமக்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு முன்பு வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றிருக்க கூடிய பூச்சி முருகனுக்கு உங்களின் சார்பில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எல்லாரும் அவரை பூச்சி முருகன் என்று அழைப்பார்கள். சிலர் பூச்சி என்று அழைப்பார்கள். விஷப் பூச்சிகளை, நச்சுப் பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்க பணியாற்றிவருகிறார் பூச்சி முருகன். நான் எப்போதும் அவரை முருகன் என்றுதான் அழைப்பேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. (இதே நேரத்தில்தான் வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கைதட்டல்).

அண்ணன் துரைமுருகனை பார்த்தால் இது உங்களுக்கு புரியும்மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகிறேன். ‘உன் பெயர் என்ன தமிழ் பெயரா?’ என்று சிலர் கேட்கலாம் எனக்கு தலைவர் கலைஞர் இட்ட பெயர் காரணப் பெயர். என் அண்ணன், தங்கைகள் அனைவருக்கும் தமிழ் பெயர்தான். கலைஞர் முதலில் எனக்கு தந்தை பெரியாரைக் குறிக்கும் அய்யா, அண்ணாவின் பெயரின் முடிவான துரை இரண்டையும் சேர்த்து அய்யாதுரை என்று பெயர் வைக்கத்தான் நினைத்திருந்தார்.ஆனால் கம்யூனிச தலைவர் ஸ்டாலின் மறைவை அடுத்து கடற்கரையில் இரங்கல் கூட்டம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு துண்டுச் சீட்டு கலைஞரிடத்திலே கொடுத்திருக்கிறார்கள். அதில் உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்துவிட்டு, ‘எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அந்த மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன்’ என்று மேடையிலேயே அறிவித்தார் கலைஞர். இதுதான் வரலாறு.


இந்த நிலையில் மண மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டி எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்”என்று உரையாற்றினார்.முன்னதாக நன்றியுரையாற்றிய தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், “இன்று போல் என்றைக்கும் உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பேன். நீங்கள் கொடுத்த பொறுப்பில் நேர்மையோடும், உண்மையோடும் செயல்படுவேன்” என்று ஸ்டாலினை பார்த்து கண் கலங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *