சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 4 மாதமாக 100 நாள் வேலைக்கு சம்பளம் வராததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து நிறுத்தம் அருகில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் 100 நாள் வேலை பணிக்காக கருப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் கூடியிருந்தனர். அப்போது காலை ஒன்பது முப்பது மணி அளவில் 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்கள் தங்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றும், ஆகையால் உடனடியாக மத்திய அரசு 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்.., நான்கு மாதமாக 100 நாள் வேலை பார்த்த எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இது குறித்து கேட்டால் அதிகாரிகள் எந்த ஒரு முறையான பதிலும் அளிப்பதில்லை. மேலும், சம்பளத்தை கேட்டால் 100 நாள் பணி வழங்க மாட்டோம் என மிரட்டுகின்றனர். ஆகையால் 100 நாள் சம்பளத்தை நம்பியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரமபடுகிறோம். மாற்றுத் திறனாளி உதவி தொகை வாங்கி அதை வைத்து சமாளித்து வருகிறோம். ஆகையால் மத்திய அரசு 100 நாள் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
