• Sun. Dec 1st, 2024

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்..!

Byவிஷா

Jul 17, 2022

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (18.7.2022) ஆரம்பமாக உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி (நாளை) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, தலைநகர் டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடியும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னதாக, அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், அமளியில் ஈடுபட்டு அவைகளை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். புதிதாக கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டம், வேலையின்மை, நாடாளுமன்றத்தில் உபயோகப்படுத்தக் கூடாத வார்த்தைகள் உள்ளிட்டவற்றை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், இந்திய அண்டார்டிகா மசோதா, 2022 உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் மசோதாக்களையும், புதிய மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை (திருத்தம்) மசோதா, 2019; ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத செயல்பாடுகளுக்கு தடை) திருத்த மசோதா, 2022 ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான திட்டத்தை பாஜக அரசு வைத்துள்ளது.
அதேபோல், வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2021, கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2019 மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 2021 ஆகியவை மக்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றவும், புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றவும் பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *