ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படுமென்று பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு 15 சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார்.
அதன்படியே தீபாவளிக்கு முன்னதாக நவராத்திரி திருநாளில் இருந்தே ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது
5%, 12%, 18%, 28% என இருந்த ஜிஎஸ்டி அடுக்கு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 5%, 18% என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான பொருட்கள் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி, “இந்தியாவின் பண்டிகைக் காலத்தில் ‘ஜிஎஸ்டி சிக்கனப் பெருவிழாவைக்’ கொண்டாடுவோம்! குறைந்த ஜிஎஸ்டி விகிதங்கள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதல் சேமிப்பையும், வர்த்தகங்களுக்கு மேம்பட்ட எளிதான செயல்பாட்டையும் வழங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் தமிழ்நாட்டில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?
பாரம்பரிய கைத்தறிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், தொழில்துறையினர், ஆட்டோமொபைல், மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாடங்களை தயாரிப்போர் நேரடி நன்மையை பெறுகின்றனர்.
திருப்பூரின் பின்னலாடை தொழிலாளர்கள், காஞ்சிபுரம் நெசவாளர்கள், பொள்ளாச்சி தென்னை நார் பொருள் உற்பத்தி கலைஞர்கள், நாகப்பட்டினம் மீனவர்கள், ஸ்ரீபெரும்புதூர் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள், ஆவடி பொறியாளர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள்.
ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் திருப்பூரில் உள்ள ஆடை ஆயத்த நிறுவனங்களுக்கான செலவுகள் 6 முதல் 11 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் லாபம் அடைய இது உதவுகிறது. சர்வதேச அளவிலான சந்தையில் இந்தியா தனது நிலையை தக்கவைத்து கொள்ள இது உறுதிசெய்கிறது.
காஞ்சிபுரம் பட்டு சேலை உற்பத்தி பொருளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்களின் செலவு 7 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் காஞ்சிபுரம் பட்டுசேலையின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு பவானி ஜமுக்காளம், விரிப்புகள் மற்றும் மதுரை சுங்குடிப்புடவைகள் விலை 6 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றுமதி சந்தையில் இந்தப் பொருட்களின் போட்டித்தன்மை அதிகரிக்கும்.
சுவாமிமலை வெண்கலப் பொருட்களுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் 6 சதவீதம் வரை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்தப் பொருட்களின் விலை 6 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் தஞ்சாவூர் பொம்மைகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் சேலம் மற்றும் காஞ்சிபுரத்தில் கையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைவினை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி, காங்கேயம் மற்றும் கடலூர் பகுதிகளில் தென்னை நார் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாய்கள், கயிறுகள் மற்றும் ஜவுளி ரகங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் இந்தப் பொருட்களின் விலை தற்போது 6-7 சதவீதம் வரை குறையும். இதன் மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவின் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பால் சில்லரை விலையில் இந்தப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் பயனடைவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி குறைப்பால் திருச்சி மணப்பாறை பகுதியில் தயாரிக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற முறுக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை 6 சதவீதம் வரை குறையும் என மத்திய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், 32 அங்குலத்துக்கு மேல் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள், டிஷ் வாஷர் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்பட உள்ளன. இதனால், அந்தப் பொருட்களின் விலை சுமார் 10 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இதேபோன்று, 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள், 350 சி.சி.க்கு உட்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 18 விழுக்காடாக குறைக்கப்படுகிறது. டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளுக்கு 5 % மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.
மேலும் உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் விலையும் குறைகிறது.
மோடி இதையெல்லாம் அறிவித்தாலும் வியாபாரிகள் உடனடியாக வரிக் குறைப்புக்கு உரிய விலைக் குறைப்பை செய்வார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பல இடங்களில் வியாபாரிகள், இது பழைய ஸ்டாக்… புதிய ஸ்டாக்குக்குத்தான் விலை குறையும் என்று சொல்லி ஏற்கனவே உள்ள அதிக விலைக்கே விற்றுவருவதாக புகார்கள் எழுந்துள்ளன
