உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே மலை போல் குப்பைகள் தேங்கி நோய் தொற்று உருவாகும் அபாயம். உரிய நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்திய எம்எல்ஏ அய்யப்பனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை. உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உள்நோயாளியாகவும், புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அரசு மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை உசிலம்பட்டி நகராட்சி சார்பில் அப்புறப்படுத்தி வந்த சூழலில், குப்பைகளை தரம் பிரிக்காமல் மொத்தமாக குவித்து வைப்பதால் மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரிப்பதில் உள்ள சிக்கல் மற்றும் குளறுபடிகளின் காரணமாக குப்பைகளை எடுத்து செல்லப்படாமல் மருத்துவமனை வளாகத்திலேயே மலை போல தேங்கி காணப்பட்டது.
இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது, இதனை அறிந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தனது சொந்த செலவில் வாகனங்களின் மூலம் மலை போல தேங்கிய குப்பைகளை அகற்றியதோடு, மருத்துவமனையிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு தரம் பிரித்து வழங்கும் போது நகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து குப்பைகளை சேகரித்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்து பொதுமக்களிடையே பெரும் பாரட்டை பெற்றுள்ளது.
