• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மன்னரென நினைத்து ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ByP.Kavitha Kumar

Mar 10, 2025

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள். தமிழக மாணவர்கள் மீது அக்கறை இல்லாதவர்கள். அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். அவர்கள் தமிழக மக்களுக்கு நேர்மையானவர்களாக இல்லை என்று கூறினார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த தமிழக எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,” தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!. தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?.

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?. NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.