தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம் குமுளி. இதன் அருகே ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் உள்ளது. அதேவேளையில் தமிழகப் பகுதியில் உள்ள குமுளி பேருந்து நிலையம் வசதியில்லாமல் ரோட்டி லேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. தமிழக கேரளா எல்லை என்பதால் நாள்தோறும் இந்த வழியாக சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர்.

மேலும் சபரிமலை சீசனில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக இவ்வழியே வந்து செல்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குமுளி வரை சென்று திரும்பும் பேருந்துகள் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதனால் பேருந்து நிலையம் கட்ட பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதனை அடுத்து குமுளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயங்கி வந்த பணிமனை இடத்தில் பணிமனையுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க 2023ல் தமிழக முதல்வர் அறிவித்தார்.

பேருந்து நிலையம் பணியை துவக்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது. இறுதியாக போக்குவரத்து துறை சார்பில் 5.5 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
பணிமனை உடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.5.5 கோடி கட்டுமானப் பணிகளை துவக்குவதற்காக பூமி பூஜை கடந்த 2023 செப்டம்பர் மாதம் நடந்தப்பட்டது.
இதனை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக 18 வணிக வளாக கடைகள், பயணியர் தங்கும் அறை, பேருந்து நிறுத்தம், சுகாதார வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், சிறிய அளவிலான பணிமனை உள்ளிட்ட வசதிகள் உடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.
ஆனால் மின் இணைப்பு தனியாக பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது தற்காலிகமாக மின் இணைப்பு பெற்று இன்று பேருந்து நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்டவர்களும் அரசு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
இது குறித்து அமைச்சர்கள் கூறுகையில்
பொதுமக்களின் 30 ஆண்டு காலமாக கேட்கப்பட்டு வந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும் சவாலான இந்த பேருந்து நிலையம் கட்டும் பணி நிறைவடைந்து இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து இந்த பேருந்து நிலையத்தில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.




