திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் வெற்றிபெற திமுக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமையேற்று பேசினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார்.
திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய போது கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சி நாயகர் கழகத்தலைவர் மு.க.ஸ்டாடலின் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியதை நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களுக்கு நான் தனியாக ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இந்த தேர்தல் திமுக என்ற பேரியக்கத்திற்கு விடப்பட்ட சவால். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெற வேண்டும்.
திமுக நிர்வாகிகள் உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ம் தேதி வரை இரவு பகல் பாராமல் அயராது உழைக்க வேண்டும். அதில் நீங்கள் தவறும்பட்சத்தில் உங்கள் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நடவடிக்கை எடுப்பார்.
இதுநாள் வரை கட்சி நிர்வாகிகள்மீது புகார்கள் வந்தபோது நான் மவுனம் காத்து நடவடிக்கை எடுக்கவில்லை. இனி அப்படி இருக்க மாட்டேன். தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் அனைவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக நினைத்து உங்களுடைய தொகுதிகளில் சிறப்பாக பணியாற்றுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.காந்திராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவை தலைவர் வழக்கறிஞர் காமாட்சி; துணை செயலாளர்கள் ஆ.நாகராஜன், பிலால் உசேன், மார்கிரேட்மேரி, மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.தண்டபாணி, ஆத்தூர் க.நடராஜன், கனகதுரை, ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மோகன், பொருளாளர் சாணார்பட்டி விஜயன், துணை செயலாளர்கள் ராஜாமணி, சுந்தரராஜன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ரெட்டியார்சத்திரம் ப.க.சிவகுருசாமி, வேடசந்தூர் வீரா எஸ்.டி.சாமிநாதன், திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பிள்ளையார்நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன், மணி, வி.எம்.ஏ.கருமலைபாண்டி, திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா, மாநகர பொருளாளர் மீடியா சரவணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.



