விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட காரியாபட்டி ஒன்றியம் புதுப்பட்டியில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்து இருந்தார்.

அப்போது பள்ளி மாணவன் அன்புக்கரசு தன்னுடைய ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து வருவதாகவும் தங்கள் ஊருக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தான். மனுவினைப் பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்.
மாணவனுடைய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் விதத்தில் காரியாபட்டியிலிருந்து ஆத்திக்குளம் வழியாக திருச்சுழி வரை புதிய வழித்தடத்தில் பஸ் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
அப்போது கோரிக்கை வைத்த மாணவன் அன்புகரசுவை வரவழைத்து புதிய பஸ் செல்லும் வழியில் கொடியசைத்து தொடங்கி வைக்குமாறு அமைச்சர் கூறினார். மாணவன் அன்புகரசு பஸ்சினை கொடியசைத்து தொடங்கி வைத்தான். பள்ளி மாணவர்களுடன் அதே பஸ்சில் அமைச்சர் தங்கம் தென்னரசு பயணம் செய்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்லம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்கணேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.