• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

86,000 குடியிருப்புகளுக்கு பட்டா: தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு

ByP.Kavitha Kumar

Feb 11, 2025

குடிமனைப் பட்டா பிரச்சினைக்கு தீர்வு கண்ட தமிழ்நாடு அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 57,000 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கவும் ஒட்டுமொத்தமாக 86,000 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கிட தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

அரசு புறம்போக்கு, மேய்க்கால் புறம்போக்கு, பெல்ட் ஏரியா, நீர்நிலைப் பகுதிகளில் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல், காத்திருப்பு போராட்டம் என பல்வேறு இயக்கங்களை மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறது. இந்த இயக்கங்களில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இம்முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில், ஏற்கெனவே நீர்நிலை மற்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கில் பல ஆண்டுகளாக சாதாரண மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வருகிற ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு என்கிற பகுதி குடியிருப்பு பகுதிகளாக மாறி இனி வேறு வகையில் பயன்படுத்த முடியாததாகவும், பல லட்சக்கணக்கான மக்களின் குடியிருப்பு உரிமை சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது.

எனவே, அப்படிப்பட்ட பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்களுக்கும், அரசு ஆவணங்களில் உரிய மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.