• Fri. Apr 26th, 2024

மருத திரைவிமர்சனம்

தென் மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கை முறையில் ஒன்றாக இருப்பது செய்முறை என்பது.
ஒருவரின் குடும்ப விழாக்களில் பங்கேற்கும் அவருடைய உற்றார், உறவினர்கள் தங்களால் இயன்ற பணத்தை அவருக்கு மொய்ப் பணமாக வைத்துவிட்டுச் செல்வார்கள். இந்த மொய்ப் பணத்தை கொடுத்த நபரின் வீட்டில் ஏதாவது நல்ல காரியம் நடந்தால் அப்போது அந்த மொய்ப் பணத்தை வாங்கியவர் அதே அளவு தொகையைக் கொடுத்தவரின் நிகழ்ச்சியில் அவருக்குக் கொடுக்க வேண்டும்.

இதுதான் செய்முறைக்கான பதில் நடைமுறை இந்த செய்முறையினால் பல நல்லவைகளும் உண்டு. கெட்டவைகளும் உண்டு. அடிதடியாகி கொலைவரைக்கும் கூட போயிருக்கிறது. அந்த அளவுக்கு உணர்வுபூர்வமான இந்த விஷயத்தைக் திரைக்கதையாக்கி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பாடம் படித்த இயக்குநர் ஜி.ஆர்.எஸ்.
ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு ராதிகாவின் அண்ணனான சரவணன் செய்முறை செய்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் ஏற்படும் ஒரு பிரச்சினையினால் அளவுக்கு அதிகமாக பணத்தையும், நகைகளையும் செய்முறையாக செய்து விடுகிறார்.அதன் பிறகு சரவணன் வீட்டில் நடக்கும் விழாவின்போது அதே செய்முறையை ராதிகா குடும்பத்தாரால் செய்ய முடியாமல் போகிறது. இதனால் சரவணனின் மனைவியான விஜி சந்திரசேகர் கோபத்தில் கன்னபின்னாவென்று ஆவேசமாகி ராதிகாவின் கணவர் மாரிமுத்துவை வீடு தேடி வந்து அசிங்கப்படுத்துகிறார். இதனால் அவமானப்படும் மாரிமுத்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்தச் சம்பவத்தினால் சரவணன் குடும்பத்திற்கும், ராதிகா குடும்பத்திற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தையே இல்லாமல் போகிறது.இப்போது சரவணன்-விஜி சந்திரசேகர் தம்பதியினருக்கு ஒரு மகளும், ராதிகாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார்கள். விஜி ஊர் முழுக்க கடன் கொடுத்துவிட்டு கருணையே இ்லலாமல் வட்டி வசூலிக்கும் மிகப் பெரிய கந்துவட்டிக்காரியாக இருக்கிறார்.

ராதிகாவோ புளியை உடைத்து பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்து ஏழ்மையில் இருக்கிறார். இவருடைய மகனும் ஊதாரித்தனமாக ஊரைச் சுற்றி வருகிறார்.நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். அதே நேரம் இந்தக் காதலை விஜி எதிர்க்கிறார்.

தனது மகளுக்கு பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்ப்பதாகச் சொல்கிறார். இதற்கு முன்பாகவே செய்முறை வைக்க வேண்டி ஒரு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்கிறார்.இந்த நிகழ்ச்சிக்கு வந்து செய்முறையை செய்துவிட்டு்ப் போகும்படி ராதிகாவை வீடு தேடி வந்து மிரட்டிவிட்டுப் போகிறார் விஜி. ராதிகாவும் செய்முறையை செய்துவிட துடிக்கிறார்.

இவரால் செய்ய முடிந்ததா.. இல்லையா.. காதலர்களின் காதல் வெற்றி பெற்றதா இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

இயக்குநர் ஜிஆர்.எஸ் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மதுரைக்காரர் என்பது அவரது டயலாக் டெலிவரியில் இருந்து தெரிகிறது. ஹீரோவுக்குரிய தோற்றம் இருந்தாலும் கவர்ச்சி இல்லை என்பது மைனஸாக இருக்கிறது.கடைசி ரீல்வரையிலும் விளையாட்டு பிள்ளையாக சுற்றியவர் கிளைமாக்ஸில் தன் தாயைவிஜிஅவமானப்படுத்திவிட்டார் என்பது தெரிந்ததும் புயலாக மாறி, விஜியின் தலைமுடியை கத்தரித்து அவரை அவமானப்படுத்தும் காட்சியில் ஒட்டு மொத்த நடிப்பையும் காண்பித்திருக்கிறார்.

நாயகி லவ்லின் சந்திரசேகர் அந்தக் கிராமத்து முகத்துக்கு பொருந்தி வருகிறார்.
“உங்க மகனை யார் கட்டிக்குவா..?” என்று நாயகியின் நண்பி ராதிகாவிடம் கேட்டவுடன் சோகத்தில் இருக்கும் ராதிகாவிடம் “மாமாவை நான் கட்டிக்கிறேன் அத்தை…” என்று சொல்லிவிட்டு ராதிகாவிடம் தன் தலையில் பூ வைத்துவிடும்படி கேட்கும் காட்சியில் மனதைக் கவர்கிறார்.

இதேபோல் அப்பா சரவணனிடம் பாசத்துடன் பேசுவதும், அம்மாவிடம் எரிச்சலுடன் பேசுவதிலும் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார் லவ்லின்.ராதிகா இவருடைய கதாபாத்திரம்தான் படத்தின் முதுகெலும்பு. இப்படிப்பட்ட பாவப்பட்ட பெண்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்குப் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர்.

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்குவார் என்ற வார்த்தைகளுக்கேற்ப ராதிகா செய்முறையை திரும்ப செய்ய முடியாமல் வீட்டுக்குள் பயந்து நடுங்கி அமர்ந்திருக்கும் காட்சியில் பரிதாபத்தை அள்ளுகிறார்.

இவருடைய அண்ணன் மனைவியான விஜியோ தனது மொத்த நடிப்பையும் இந்தப் படத்தில் காட்டிவிட்டார். மீட்டருக்கு மேலே நடிப்பதென்பது இதுதான் போலும்.அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் இதுதான் என்பதால் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்தக் கேரக்டராகவே அவர் வாழ்ந்துவிட்டார். இவருடயை அறிமுகக் காட்சியே அபாரம். நாக்கைத் துருத்திக் கொண்டு கடன் கொடுக்காத நபரை விரட்டிப் பிடித்து தெருவில் புரட்டியெடுக்கும் பெண் தாதாவாகவே வாழ்ந்திருக்கிறார்.

விஜி ராதிகாவின் வீட்டு முன்பாக தெருவில் வாழை இலை விரித்து அதில் கறி சோறு பரிமாறி செய்முறையை திரும்ப செலுத்த கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியில் விஜி அட்டகாசம் செய்திருக்கிறார்‘பருத்தி வீரன்’ சரவணன் கம்பீரமான மீசையுடன் வந்தாலும் அவரது கதாபாத்திரம் சில காட்சிகளில் வேகம் காட்டியும் சில காட்சிகளில் சோகம் காட்டியும் நடமாடுகிறது. வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இருவரும் கதையின் திருப்பங்களுக்குப் பயன்பட்டிருக்கின்றனர்.பட்டுக்கோட்டை ரமேஷின் ஒளிப்பதிவில் குறைவில்லை. நாயகியை அழகான கோணத்தில் மட்டுமே காண்பிக்க வேண்டும் என்கிற விரதத்தில் இருந்து அதன்படியே செய்திருக்கிறார் போலும்.

கிராமத்து அழகியலை கொண்டு வந்து, ஏழ்மையையும், பணக்காரத்தன்மையையும் கலந்து காட்டியிருக்கிறார். கலை இயக்குநருக்கும் ஒரு பாராட்டு. படத்துக்கு பக்க பலமாக இருக்கிறது இளையராஜாவின் இசை. 1980களின் காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது
மேலும், மதுரைக்கார வசன உச்சரிப்பை அப்படியே கொண்டு வந்ததன் காரணமாக பல வசனங்கள் புரியாமல் போய்விட்டது.

அதிலும் நாயகன், நாயகியிடம் பேசும் காதல் வசனங்களெல்லாம் புரியாதது போலவே இருக்கிறது. இந்தக் குறைகளை சரி செய்திருக்கலாம். இந்த செய்முறை முன் காலத்தில் மக்களுக்கு உதவியாக இருந்திருந்தாலும் தற்போது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், பிரிவு என்று துவங்கி கடைசியாக தற்போது கொலை வரையிலும் போய் முடிந்திருக்கிறது. இந்த செய்முறைக்காக வட்டிக்குக் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்களும் உண்டு.இப்படி கடனாளியாக தவிப்பவர்களின் கண்ணீரையும், செய்முறை என்ற பெயரில் கந்துவட்டிக்காரர்களாக செயல்படுபவர்களின் கொடுமையையும் தைரியமாக இந்த மருது பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

தயாரிப்பு :சபாபதி
நடிகர்கள்: ஜி.ஆர்.எஸ்., ராதிகா சரத்குமார், விஜி சந்திரசேகர், சரவணன், லவ்லின், வேல.ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை : இளையராஜா,
ஒளிப்பதிவு:பட்டுக்கோட்டை பி.ரமேஷ்,
பாடல்கள்: பழனிபாரதி, பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித் ராம், படத் தொகுப்பு: ஏ.ஆர்.பி.ஜெயராம், எழுத்து, இயக்கம் – ஜி.ஆர்.எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *