• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

’மால்’ திரை விமர்சனம்

Byஜெ.துரை

Sep 26, 2023

சிவராஜ்.ஆர், கார்த்திக் எம்.பி ஆகியோரது தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினேஷ் குமரன் இயக்கத்தில், வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மால்’. இத்திரைப்படம் ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் தனிப்படை காவல்துறை ஈடுபடுகிறது.

அதே சமயம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல் திட்டம் போடுகிறது. மறுபக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ் வீட்டில் திருடுவதற்கு அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் திட்டம் போடுகிறார்கள்.

தன்னுடன் பணியாற்றும் ஜெய்யிடம் காதலை சொல்ல விஜே பப்பு முயற்சிக்கிறார். ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இவர்கள் சோழர் சிலையால் ஒரு வட்டத்திற்குள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட, அதனால் இவர்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள், அதில் இருந்து மீண்டார்களா, இல்லையா, சோழர் சிலை என்னவானது, என்பது தான் கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் கெளரி நந்தா இருவர் மட்டுமே தெரிந்த முகங்களாக இருக்கிறார்கள். மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், கதபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

திருடர்களாக நடித்திருக்கும் அஸ்ரப் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் கூட்டணி பரபரப்பான நகரும் படத்தில் அவ்வபோது நம்மை சிரிக்க வைக்கவும் செய்கிறது.

கஜராஜின் அனுபவமான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

வில்லத்தனம் கலந்த வேடத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் சாய் கார்த்திக் கவனம் ஈர்க்கிறார். சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை கெளரி நந்தாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு என இரட்டை குதிரை சவாரி செய்திருக்கும் சிவராஜ்.ஆர், இரண்டையுமே சிறப்பாக செய்திருக்கிறார். இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் ஒளிப்பதிவாளராக கவனம் ஈர்ப்பதுடன், காட்சிகளை வேகமாக நகர்த்தி படத்தொகுப்பாளராகவும் பாராட்டு பெறுகிறார்.

பத்மயன் சிவானந்தத்தின் இசையில் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

சிலை கடத்தல் சம்பவத்தை வைத்துக்கொண்டு பரபரப்பான திரைக்கதை மற்றும் வேகமாக பயணிக்கும் காட்சிகள் அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் தினேஷ் குமரன், தான் சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு காதல் ஜோடி, இரண்டு திருடர்கள், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், கடத்தல்காரர் மற்றும் அவரது எதிரிகள் ஆகிய கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு காதல், ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் சிறிய பட்ஜெட்டில் ஒரு நேர்த்தியான படத்தை கொடுத்திருக்கிறார். மொத்தத்தில்”மால்” திரைப்படம் மாஸ்.