
மதுரை அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மேற்கு ஒன்றியம் சின்னப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டி இருந்தும் காட்சிப்பொருளாக உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மாணவர்கள் குறை கூறுகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறதாம். குடிநீருக்காக மாணவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று அருகிலுள்ள வீடுகளில் தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவறைகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கழிவறைகள் சுத்தம் செய்யப்படாததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மாணவ மாணவியர் கழிவறைகளை உபயோகிப்பதில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்றால் விஷப்பூச்சிகள் நடமாடுவதால் மாணவியருக்கு பாதுகாப்பில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அடப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்


