இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுப்படுவதை முன்னிட்டு, மதுரை சரகத்தின் கீழ் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு அளித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், ஆண்களின் வாழ்வில் உற்ற துணையாக, ஆதரவாக, எப்போதும் உடனிருக்கும் பெண்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அலுவலகங்கள், பொது இடங்களில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மகளிர் தினத்தன்று, காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன். காவல் துறையில் பணியாற்றும் பெண் போலீசார், காலம் நேரம் பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றி சமூகத்துக்காகவும், மக்களுக்காகவும் உழைப்பதைப் பெருப்மைப்படுத்தும் விதமாக, பெண் போலீசாரின் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக காவல் துறையில் பணி புரியும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கணவர், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பணி இடம் மாறுதல் அளிக்கப்படுகிறது. மகப்பேறு விடுமுறை முடிந்த பின்னர் பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்பட்டு வருகிறது.
மகப்பேறு விடுப்பு முடிந்து பின், பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, தங்களின் சொந்த ஊரில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பெண் காவலர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன். இந்த அறிவிப்பு பெண் போலீசார் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு அளித்த மதுரை கமிஷனர்
