

அங்கிதா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் விஹான் ஜாலி நடிப்பில் வெளிவந்த படம் லாக்டவுண் டைரி. இப்படத்தில் யுமுகேஷ் ரிஷி, எம்.எஸ்.பாஸ்கர், பிரவீனா, முன்னா சைமன், முத்துகாளை, விஷ்ணுகுமார், கல்லூரி வினோத், திரிஷ்யா ஆகியோர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதா நாயகன் விஹான் ஜாலியும், நாயகி ஷகானாவும் காதலிக்கிறார்கள். பணக்கார பெண்ணான ஷகானாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் ஷகானா, பெங்களூரில் தனது குழந்தை கணவர் என்று குடும்பமாக வசித்து வருகிறார்.
திடீரென்று உடல் நிலை பாதிக்கப்படும் அவர்களது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதோடு, அதற்கு பல லட்சங்கள் செலவு ஆகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதே சமயம் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் விஹான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதோடு, பலரிடம் கடன் வாங்கிவிட்டு பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறார்.
இதற்கிடையே வயதான தொழிலதிபர் முகேஷ் ரிஷியின் இளம் வயதுள்ள இரண்டாவது மனைவியான நேஹா சக்சேனாவின் அறிமுகம் விஹானுக்கு கிடைக்கிறது. அவர் விஹானை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்ற பண உதவி செய்கிறார்.
ஆனால் அதற்கு பதிலாக அவர் ஒரு விஷயத்தை செய்ய சொல்ல விஹான், அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஒரு கட்டத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணத்திற்காக விஹான் பல இடங்களில் முயற்சித்தும் பணம் கிடைக்காமல் போக அவர் மீண்டும் நேஹா சக்சேனாவிடம் உதவி கேட்கிறார்.
அவரோ தான் சொல்வதை செய்தால் பணம் கொடுப்பதாக சொல்ல விஹான் அதை செய்தாரா? இல்லையா? நேஹா சக்சேனா கேட்பது என்ன? என்பது தான் படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் விஹான், ஜாலி வில்லன் போல் முகபாவனை இருந்தாலும் நடிப்பில் தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்து விட்டார்.
கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் போதும் உயிருக்கு போராடும் தன் குழந்தையின் நிலைமையை நினைத்து கலங்குவதும் நேகா சக்சேனாவின் வினோதமான விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிப்பது என்று அனைத்து காட்சியிலும் தன் நடிப்புத் திறைமையை காட்டியுள்ளார். நடனம், சண்டைக்காட்சி என சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் ஷகானா தமிழில் அறிமுக நாயகியாக இருந்தாலும் அழகு மற்றும் நடிப்பு என இரண்டிலும் அசத்தியுள்ளார். கன்னட சினிமாவின் முன்னணி நடிகையான நேஹா சக்சேனா படத்தின் திருப்புமுனை கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் பி.கே.எச்.தாஸ், காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
ஜே.சி. கிஃப்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை.
லாக்டவுண் என்று தலைப்பு வைத்து ஊரடங்கு பிரச்சனை பற்றி அதிகம் பேசாமல் ஒரு பெண்ணின் பிரச்சனையை கதையாக எழுதி இயக்கியிருக்கிறார். இயக்குநர் ஜாலி பாஸ்டியன்.
குடும்ப சூழ்நிலையால் அதிகம் வயது வித்தியாசமுள்ள ஆண்களை திருமணம் செய்துகொள்ளும் இளம் வயது பெண்களின் மனநிலைமையயும் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை அநியாயமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
மொத்தத்தில் இந்த லாக்டவுண் டைரி படம் பார்ப்பவர்ளுக்கு மன அழுத்தம் இலவசம்…

