• Mon. May 23rd, 2022

பெண்மையை கொண்டாடுவோம்…தலைவர்களின் மகளிர் தின வாழ்த்து

நம் நாட்டில் அனைத்து களங்களிலும் ஆதிகாலம் முதலே பெண்கள் தலைமை வகித்தது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும் என்று அரசியல் தலைவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த தருணத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர் என் ரவி

இந்த உலக மகளிர் தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறந்த நாளில் நாம் பெண்களின் பெண்மையை மதித்து கொண்டாடுவோம். நம் நாட்டில் ஆன்மிகம் அறிவுசார் சமூக மற்றும் அரசியல் களங்களில் ஆதிகாலம் முதலே பெண்கள் தலைமை வகித்தது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணமாகும். அவ்வையார், வீர மங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய அனைத்து பெண் தலைவர்களுக்கு தேசம் எப்போதும் நன்றியுடன் இருக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், தொழில்முனைவு, ஆராய்ச்சி, மேம்பாடு,நிர்வாகம் மற்றும் அரசியல் என அனைத்து தளங்களிலும் நமது பெண் தலைவர்களைப் பற்றி பெருமை கொள்ளவேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் தனது இலக்கை நிறைவேற்ற தேசம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பெண்களின் மேதைமை முழுமையாக மலருவதற்கு பாதுகாப்பான மற்றும் ஏதுவான சூழலை உறுதி செய்வது நமது தனிப்பட்ட மற்றும் கூட்டுப் பொறுப்பாகும். இந்த நன்நாளில் நம் பெண்கள் தங்கள் அயராத பங்களிப்பை தொடர வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், பெண் ஏன் அடிமையானாள் என்று கேள்வியெழுப்பி, அறிவொளிப் பாய்ச்சிய பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியில் நடைபோடும் திராவிட மாடல் அரசு, மகளிர்களுக்கான எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 40 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்வு, தொடக்கப் பள்ளிகளில் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு, பேறுகால விடுப்பு ஒரு ஆண்டாக உயர்வு,மகளிர் சுயஉதவிக் குழு, திருமண நிதி உதவி,கல்விக் கட்டணச் சலுகைகள், நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று பெண்களுக்கான சமூக பொருளாதார உரிமைகளை மீட்டளிக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். பெண்களின் முன்னேற்றத்துக்குத் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

ஓபிஎஸ்,இபிஎஸ்

தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்வு சிறக்க, கழக அரசுகள் நிகழ்த்திய சாதனைகளும் வரலாற்றுச் சிறப்புக்கு உரியனவாகும். அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என எம்ஜிஆர், தனி இடஒதுக்கீடு வழங்கினார். பெண்கள் நலனுக்காக ஜெயலலிதா, தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கல்விக்காக ரொக்கப் பரிசு, தாலிக்குத் தங்கம், மகப்பேறு நிதி உதவி என்று தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார். அவர் மறைவுக்குப் பின்னர், பெண்களுக்கான மகப்பேறு திட்டத்தின் உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்வு, மானிய விலையில் ஸ்கூட்டர், மகப்பேறு விடுமுறைக் காலம் அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, சமூகத்தில் ஆணுக்கு நிகராக மட்டும் அல்ல, ஆற்றல் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி, பெண் எத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமோ, அத்தனை உயரத்திற்குச் சென்று சீரும், சிறப்புமாக வாழ அதிமுக எந்நாளும் உழைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.