• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா விருது அறிவிப்பு

By

Aug 30, 2021 ,

கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் 2021-ம் ஆண்டுக்கான கி.ரா. விருது பிரபல எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு. வேலாயுதம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“உலகப் புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23-ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கடந்த 5 ஆண்டுகளாக கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் சிறந்த படைப்பாளரைத் தேர்வு செய்து ஜெயகாந்தன் விருது, கவிஞர் மீரா விருது, புதுமைப்பித்தன் விருது, சிறந்த அரசு நூலகருக்கு சக்தி வை கோவிந்தன் விருது, சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கி.ரா. (கி.ராஜநாராயணன்)வின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய பெயரில் கி.ரா. இலக்கிய விருது ரூ2,00,000 தருவதற்கு நடிகர் சிவகுமாரின் முயற்சியின் பெயரில் சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, சாந்தி துரைசாமி தம்பதியினர் முன்வந்தனர். அதையொட்டி சென்ற ஆண்டு கி.ரா. பிறந்த நாளன்று (16.9.20) புதுச்சேரியில் அவரது இல்லத்தில், அவரது கரங்களால் எழுத்தாளர் கண்மனி குணசேகரனுக்கு கி.ரா. விருதும் விருதுத் தொகை ரூ2,00,000-ம் வழங்கப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பின் ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற புகழாஞ்சலி நிகழ்ச்சியில் சக்தி மசாலா தம்பதியினர் விருதுத் தொகையை ரூ5,00,000/ ஆக உயர்த்தி அளிப்பதாக அறிவித்தனர். அதன்படி முதலாண்டு விருது பெற்ற எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு மீதம் ரூ3,00,000 அனுப்பப்பட்டது. இந்தியாவில் ஞானபீட விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகியவற்றுடன் கி.ரா. விருது ரூ5,00,000 மதிப்புடையதாக பெருமை மிக்க வரிசைகளில் வருகிறது. இரண்டாமாண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி, நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 19-ந் தேதியன்று ஜூம் செயலி மூலம் விருது வழங்கும் விழா நடைபெறும். 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி நென்மேனி மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கோணங்கி. இவரது இயற்பெயர் இளங்கோவன். சுதந்திரப் போராட்ட தியாகி மதுரகவி பாஸ்கதராஸின் மகள் வழிப் பேரன். மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதி- எழுத்தாளர் மே.சு. சண்முகம் தம்பதியினரின் 2-வது மகனாகப் பிறந்தவர். கல்குதிரை சிற்றிதழின் ஆசிரியர். பாழி, பிதிரா, த, நீர்வளரி ஆகிய 4 நாவல்கள் சிறப்பு கவனத்தைப் பெற்றவை. தமக்கென தனித்த மொழி நடையை தமிழில் உருவாக்கி இருப்பவர் கோணங்கி” என குறிப்பிடப்பட்டுள்ளது.