• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழா

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023
திரை மற்றும் இலக்கிய உலகினர் கலந்து கொண்ட பரிசு வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர்.பி.டி.தியாகராசர் அரங்கத்தில் நடைபெற்றது.
கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவைப் போற்றும் விதமாகவும் இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினர் மற்றும் இலக்கிய உலகினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தமிழ் படைப்புலகில் பெரும்புகழ் பெற்று மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான், ’ஹைக்கூ’ என்று அழைக்கப்படுகின்ற குறுங்கவிதை வடிவத்திலும் முத்திரை பதித்து, அக்கவிதை வடிவின் மிகச் சிறந்த ஆய்வாளராகவும் விளங்கினார்.


அவரது நினைவாக ஹைக்கூ கவிதை வடிவத்தை தமிழ் இலக்கிய உலகில் மேலும் பரவச் செய்யும் வகையில், ‘கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி’ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த முயற்சிக்குப் பெருமளவில் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் கவிதைகளை அனுப்பியிருந்தனர்.
வெவ்வேறு நடுவர் குழுவின் மூன்று கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, முதல் மூன்று பரிசுகளைப் பெறத் தகுதியான கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த முன்னெடுப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக பிரபல திரைப்பட இயக்குநர் என்.லிங்குசாமி பங்காற்றினார்.
முதல் பரிசு ரூபாய் 25.000 பெறும் கவிதை: வானத்துச் சூரியனை
சிறிது தூரம் சுமந்து செல்கிறாள்
தயிர் விற்கும் பாட்டி. (சா. கா. பாரதி ராஜா செங்கல்பட்டு)
இரண்டாம் பரிசு ரூபாய் 15,000 பெறும் கவிதை: மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம் கேட்கும் மணியோசை. (பட்டியூர் செந்தில்குமார், துபாய்)
மூன்றாம் பரிசு ரூபாய் 10,000 பெறும் கவிதை மந்தையிலிருந்து தவறிச் செல்லும் ஒற்றை ஆட்டின் பாதை சரியாகவும் இருக்கலாம். (ச.அன்வர் ஷாஜி, நாமக்கல்)
முதல் மூன்று பரிசு பெற்ற மூன்று கவிதைகளோடு, தேர்வு செய்யப்பட்ட ஐம்பது கவிதைகளும் தொகுக்கப்பட்டு, விழாவில் ’டிஸ்கவரி பதிப்பகம்’ வாயிலாக நூலாக வெளியிடப்பட்டது.
விழாவுக்கான வரவேற்புரையை டிஸ்கவரி புக் பேலஸ் மு.வேடியப்பன் வழங்க, பேராசிரியர், முனைவர் கு.ஞானசம்பந்தம் தலைமை உரையை ஆற்றியதோடு நூலையும் வெளியிட்டார்.
விழா நோக்க உரையை என்.லிங்குசாமி வழங்க, ‘கவிக்கோவும், ஹைக்கூவும்’ என்ற தலைப்பிலான சிறப்புரையை கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆற்றினார்.
கவிக்கோ நினைவுரையை கவிஞர் ஜெயபாஸ்கரனும் கவிஞர் இளம்பிறையும் வழங்கினர். ஆர்.சிவக்குமார் (விஷ்ணு அசோசியேட்) வாழ்த்துரை வழங்கினார்.
மதிப்புரை தேர்வுக்கும் தொகுப்புக்கும் கவிஞர் தங்கம் மூர்த்தி பொறுப்பேற்க, நன்றியுரையை கவிஞர், இயக்குநர் பிருந்தாசாரதி வழங்கினார். கவிக்கோ அப்துல் ரகுமானின் காலம் கடந்த நினைவலைகளோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.