கனியாமூர் பள்ளி மாணவியின் மர்மமரணத்தின்போது பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என்ன என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.
கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாணவின் மரணத்துக்கு நீதி கேட்டு, கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளி பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களை தீயிட்டு, பள்ளியில் உள்ள பொருட்களை கலவரக்காரர்கள் சூறையாடினர்.
முதல்கட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பள்ளியை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே கலவரக்காரர்களிடம் இருந்துள்ளது. இதற்காக, மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்பது போன்று, போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த கும்பல், வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முழு காரணம் பள்ளியின் தாளாளர் மீதான வெறுப்பு தான். பள்ளி தாளாளர் ரவிக்குமார், அதிக கடனில் இருந்துள்ளார். இதனால், கல்விக் கட்டணத்தை கறாராக வசூலித்துள்ளார். எந்த அமைப்பாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும் நன்கொடை தர மறுத்துள்ளார். இதனால், ரவிக்குமார் மீது பல்வேறு அமைப்புகளுக்கு கோபம் இருந்துள்ளது. பெற்றோரிடமும் ரவிக்குமார் கறாராக நடந்துள்ளார். தன் தாய் சிறிய அளவில் தொடங்கிய பள்ளியை, ரவிக்குமார் வங்கியில் கடன் பெற்று விரிவுபடுத்தியுள்ளார். அரசியல் கட்சியினரிடமும் ரவிக்குமார் பகையை சம்பாதித்து உள்ளார். இப்படி பல்வேறு தரப்பினரிடையே ரவிக்குமார் எதிர்ப்பை சம்பாதித்ததே, இந்த கலவரத்திற்கு காரணம் ஆகும். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மாணவி மரணம் குறித்த விசாரணையும் பல்வேறு கோணங்களில் நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.