மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. இதை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது என்று திமுக எம்.பி கனிமொழி கூறினார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (மார்ச் 10) தொடங்கியது. அப்போது திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக் கொண்டது. பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இப்போது என்னிடம் கேள்வி கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சில தமிழக எம்.பிக்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர். பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சினை செய்கிறார்கள்.
நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், இமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், திமுகவினர் நேர்மையற்றவர்கள் என்று கூறினார். இதனால் ஆவேசமடைந்த தமிழக எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், “கேள்வி நேரத்தின் போது எங்கள் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டின் தீவிர பிரச்சினை குறித்து பேசினார், ஏனெனில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான நிதியை கொடுக்கவில்லை., புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையில் கையெழுத்திட தமிழக அரசு ஒப்புக் கொள்ளாவிட்டால், ரூ.2000 கோடிக்கு மேல் மதிப்புள்ள நிதி எங்கள் குழந்தைகளுக்கு விடுவிக்கப்படாது என்று கூறுகின்றனர். மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. இதை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது.
தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று பிரதமர் மோடி, கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும். தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் கூறியது மனதை புண்படுத்துகிறது” என்றார்.