• Thu. Apr 24th, 2025

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்..!

ByKalamegam Viswanathan

Nov 13, 2023

17ஆம் தேதி சூர பத்மனை வதம் செய்ய சக்திவேல் வாங்கும் விழாவும் பதினெட்டாம் தேதி சூரசம்ஹார லீலை விழாவும் நடைபெற உள்ளது.

கந்த சஷ்டி விழா துவக்கத்திற்காக கோவில் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் இன்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு காலை ஏழு மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.

உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் இருக்க தொடங்கினார்கள் .

விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆக வருகின்ற 17ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 18ஆம் தேதி சூரசம்கார லீலை நடைபெறும்.

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். விழாவில் நிறைவு நாளான 19ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார் .

அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு: கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் 7 நாட்கள் தங்கி சஷ்டி விரதம் இருப்பார்கள்.

அவர்களுக்கு கோயில் சார்பில் காலையில் திணை மாவு, தேன் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். தொடர்ந்து மதியம் 1500 பேருக்கு உணவு வழங்கப்படும். மாலையில் எலுமிச்சை சாறு இரவு பால் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு கோவிலுக்குள் தினமும் நடைபெறும் யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகளை டிவிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார த்துறை சார்பில் கிரிவலப் பாதைகள் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீயணைப்புத்துறை சார்பில் 24 மணி நேரமும் கோயில் வாசல் பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.