• Fri. Apr 26th, 2024

ஜூலை 18 குடியரசுத் தலைவர் தேர்தல்

ByA.Tamilselvan

Jun 9, 2022

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டெல்லி விக்யான் பவனில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது;- தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ம் தேதி பதவியேற்பார். இந்நிலையில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். வேட்புமனு ஏற்கப்பட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29-ம் தேதி, ஜூன் 30-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *