கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பிரசித்திபெற்ற முந்தி விநாயகர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இந்த காமாட்சியம்மன் கோவில், பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு கோவில் பூஜைகள் முடிந்து நடை மூடப்பட்ட பிறகு, மர்ம நபர்கள் கோவிலின் முன்புற வாயில் மீது ஏறி குதித்து உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் நேரடியாக கருவறைக்குள் சென்று, அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை சம்பவத்தின் போது, அடையாளம் தெரியாமல் இருக்கும்விதமாக கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
காலையில் கோவிலை திறந்த அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகத்தினர், அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோவிலை சுற்றி ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பதிவுகள் மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நகை கொள்ளை சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






