• Sat. Apr 27th, 2024

மத்திய அரசால் தெருவுக்கு வந்த நகைக்கடை வியாபாரிகள்!..

By

Aug 23, 2021

மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று நகைக்கடைகளை மூடி, உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தங்க நகைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தங்க நகைகளை மட்டுமே விற்க வேண்டுமென என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரையைக் கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவை ஏற்று ஹால்மார்க் தங்கத்தை மட்டுமே விற்க நகைக்கடை வியாபாரிகள் தயாராக இருந்தாலும், தர முத்திரை வழங்கும் மையங்களில் போதுமான வசதிகள் இல்லாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் முடங்கியுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தது. இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி 50 நாட்கள் ஆன நிலையிலும், பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். கொரோனா காலக்கட்டத்தை கருத்தில் கொண்டாவது சிறிது காலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் நகைக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

256 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம் என்றாலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு கீழ் விற்பனை இருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ச், பேனா உள்ளிட்டவற்றுக்கும், குந்தன் உள்ளிட்ட சில ஆபரங்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஹால்மார்க் முத்திரைக்கான மையங்கள் குறைவாக இருப்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக எழுந்தது.

எனவே மத்திய அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை காட்டும் விதமாக தமிழகம் முழுவதும் நகை கடை உரிமையாளர்கள் இன்று நகைக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தங்க நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் காலை 9 மணி முதல் 11 மணி வரை கடைகளை அடைத்து பதாகைகளை ஏந்திய படி கடையின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராஜவீதியில் தங்க நகை தயாரிப்பாளர்கள் 500 க்கும் மேற்பட்ட நகைகடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான லோகநாதன் தலைமையில் திருச்செங்கோட்டில் நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். மதுரையில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு, ஹால்மார்க் புதிய விதிமுறையை திரும்ப பெற வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தேனி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *