
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே முகமூடி கொள்ளையர்கள் கத்திமுனையில் தம்பதியரை மிரட்டி நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (53). இவரது மனைவி கணேஷ்வரி (46). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகேந்திரன் திருவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பழக்கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில், இரவு வீட்டில் மகேந்திரனும், கணேஷ்வரியும் இருந்த போது, முகமூடி அணிந்த இரண்டு மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து மகேந்திரனை கத்தியைக் காட்டி மிரட்டினர். பின்னர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து, கணேஷ்வரியை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் அங்கிருந்து செல்லும் போது, வீட்டிலிருந்த கண்காணிப்பு காமிராவின் வயரை அறுத்துவிட்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை சம்பவம் குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூர் புறநகர் பகுதியில் முகமூடி அணிந்து, தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை கொள்ளையடித்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

