• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜெய்பீம்தான் நான் சினிமாவுக்கு வர காரணம் – இயக்குநர் ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரஞ்சித் பேசுகிறபோது
‘ஜெய்பீம்’ இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.


வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. சசி சார் நான் உதவியாளனாக இருந்த போது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர. இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அவர் தான் கூப்பிட்டு படத்தின் கலக்சன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்ட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். யாழி புரடக்சன் மனோஜ் மற்றும் விக்னேஷ் சினிமாவை சரியாக புரிந்து கொண்டவர்கள் அவர்கள் இன்னும் பெரிய சினிமாக்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிக திறமையானவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் என்னை புரிந்துகொண்டு எனக்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. என் குடும்பம், மிளிரன், மகிழினி என்னை தொந்தரவு செய்யாமல் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் அம்மா 15 வருடம் முன் “பார்த்து போயா ஜெயிச்சுட்டு வா” என்று அனுப்பினார் .இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜெயிச்சுட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. காதல் சமூகத்தில் அத்தனை எளிதில்லை அதை இந்தப்படம் பேசும்.