• Tue. May 7th, 2024

தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது : நிர்மலாசீதாராமன்..!

Byவிஷா

Dec 22, 2023

தென்மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. தமிழகத்தில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை, மாநில பேரிடர் என மாநில அரசு அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அதிகாரிகள் செய்வர் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை என்றும், தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
முன்னதாக பேசிய அவர், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்றும், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு செய்யப்பட்டது. இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன்? பாதித்த இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர். மழை, வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக்கொண்டது. தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது. மாநில அரசு என்ன செய்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு சேய்த ரூ.4,000 கோடி எங்கேப் போனது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குறைகூறுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *