திருச்சி- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO World Heritage Site) உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து அதற்கான சந்திப்புகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ.
கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி
ஒன்றிய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்த துரை வைகோ…
“எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விவகாரமாக இருக்கிறது. இதற்கு முறையாக பரிந்துரை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
ஸ்ரீரங்கம் கோயில் ஒரு மரியாதைக்குரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீகத் திருத்தலமாகவும், கட்டிடக்கலையில் அற்புதங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயிலாகவும் திகழ்கிறது.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில், 2014ஆம் ஆண்டு இந்திய அரசால் யுனெஸ்கோவின் தற்காலிக பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இருப்பினும், இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன.
யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ள 10 தகுதிகளில் ஒரு தகுதியை பூர்த்தி செய்தாலேயே இந்த உலக பாரம்பரிய சின்னம் தகுதி கிடைக்கும் சூழ்நிலையில், ஶ்ரீரங்கம் திருத்தலமானது இவற்றுள் நான்கு தகுதிகளை பூர்த்தி செய்கிறது.
மேலும், 2017ஆம் ஆண்டு இந்தக் கோயில் விஞ்ஞான ரீதியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதற்காக யுனெஸ்கோவின் விருது பெற்றுள்ளது.
இந்த விருது, கோயிலின் பாரம்பரிய முக்கியத்துவத்தையும், அதை பாதுகாக்கும் முயற்சிகளையும் உலகளவில் அங்கீகரிக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
ஸ்ரீரங்கம் கோயில், அதன் ஒப்பற்ற கட்டிடக்கலை பிரம்மாண்டத்திற்கும், ஆழமான ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும் எடுத்துக்காட்டாக உலகிலேயே மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள இந்து கோயில் வளாகமாகத் திகழ்வதை சுட்டிக்காட்டி,
2014ஆம் ஆண்டு தற்காலிக பட்டியலில் இடம்பெற்ற இந்தக் கோயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பதற்கு முறையாகப் பரிந்துரை செய்யவும், அதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பாரம்பரிய நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அமைச்சரை வேண்டிக்கொண்டேன்” என்று இந்த் சந்திப்பு பற்றி கூறினார் துரை வைகோ.
மேலும் இதே கோரிக்கை தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசினார் துரை வைகோ.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால், அது ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. இதற்கு ஏற்கனவே மாமல்லபுரம் கண்கண்ட எடுத்துக்காட்டாக இருக்கிறது என்று எச்சரித்துள்ளார் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளாரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான மல்லை சத்யா.
மதிமுக விவகாரங்கள் ஒருபக்கம் இருந்தாலும் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் மல்லை சத்யாவிடம் இதுகுறித்துப் பேசும்போது,
“ ஶ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை ஒன்றிய அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் தமிழ் நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இரண்டு இணை ஆணையர்கள் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஆலயம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டால் ஒருவேளை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் போய்விடும் சூழ்நிலை உருவாகும்.
இது மாநில உரிமையை ஒன்றிய அரசுக்கு தாரை வார்ப்பதைப் போன்றதாகிவிடும்.
பழமையை பராமரிக்கின்றோம் என்ற பெயரில் தொல்லியல் துறை ஐந்து கால பூஜைகள், திருவிழாக்கள் நடைபெறும் ஆலயத்தை பாழடைந்து வவ்வால் தங்கும் இடமாக மாற்றி விடுவார்கள்.
கோவிலைச் சுற்றி பூ மற்றும் பூஜைப் பொருட்கள் சிறு கடைகள், உணவகங்கள், தேனீர் கடைகள் வைத்து விற்பனை செய்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள்.
புராதன சின்னம் அமைந்துள்ள இடத்தை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து 100 மீட்டர் 300 அடி சுற்றி எந்தவிதமான புதிய கட்டிடம் கட்டுவதற்கும் ஏன் புதுப்பிப்பதற்கும் அனுமதி இல்லை.
300 மீட்டருக்கு அப்பால் ஆயிரம் அடி தூரத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையிடம் சென்று அனுமதி பெற்றாக வேண்டும்.
இது மக்களின் வாழ்வுரிமையையும் வழிபாட்டு உரிமையும் பரித்துவிடும்.
இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் அனுமதி பெற்றாரா? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஆலோசித்தாரா? சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர் மற்றும் ஶ்ரீ ரங்கம் மக்களின் கருத்தைக் கேட்டு அறிந்தாரா?
பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொல்லியல் துறையால் நேரிடையாக பாதிக்கப்பட்டது மாமல்லபுரம். அந்த அனுபவத்தில்தான் இந்த எச்சரிக்கையை நான் விடுக்கிறேன்.
ஏற்கெனவே 2010 ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் பாரம்பரிய சின்னம் பகுதியில் வசிக்கும் மக்கள் உள்நாட்டு அகதிகளாக மாற்றப்பட்ட நிலையில், 2012 ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில் கையகப் படுத்துவதால் மக்களின் வழிபாட்டு உரிமையும் பறிக்கப்படும் என்று பல கட்டப் போராட்டங்களை நடத்தினோம்.
இதன் விளைவாக 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில் கையகப் படுத்துவதை மத்திய தொல்லியல் துறை கைவிட்டது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிபந்தனைகளுடன் புதிய மின் இணைப்பு பெற சுற்றறிக்கை அனுப்பப்பட்டது எனவே ஶ்ரீ ரங்கம் மக்களே எச்சரிக்கை.
தமிழ் நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் சிறப்பாக இயங்கி வரும் ஶ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்து ஒன்றிய பாஜக அரசின் தொல்லியல் துறைக்கு தாரை வார்த்து கொடுக்க துரை வைகோ முயற்சித்து வருகிறார்.
தமிழ் நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை, நிலங்களை பறிக்க வேண்டும் என்பதுதான் பாஜக மற்றும்
ஆர் எஸ் எஸ் சின் மறைமுகத் திட்டம்.
அதை திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக நடைமுறை படுத்த துடிக்கின்றார் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை” என்று கூறியுள்ளார் மல்லை சத்யா.
இதுகுறித்து செய்தியாளர்கள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டபோது, “இந்த விவகாரம் குறித்து துரை வைகோவிடம் பேசப் போகிறேன்” என்று பதிலளித்தார்.
