தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி மீனாட்சி மருத்துவமனை அறிமுகம் செய்த பெருமையை பெற்றுள்ளது.
மிகக் குறைந்த ஊடுருவல் உள்ள இந்த மருத்துவ செயல்முறை, சிக்கலான கரோனரி பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரு முதியவர்கள் உட்பட நான்கு இதய நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கிறது.
ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு டிரான்ஸ்கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் இரத்த உறைக்கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் அலைக்கற்றைகளை உமிழ்கின்ற ஒரு சிறப்பு கதீட்டரைப் பயன்படுத்துகிறது.
இந்த மேம்பட்ட இதய சிகிச்சை தொழில் நுட்பமானது, அடைப்புகளை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்கிறது மற்றும் குறிப்பிட்ட இலக்குகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. குறிப்பாக சிக்கலான புண்களுக்கு அல்லது கால்சிய படிமங்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது அதிக பலனளிப்பதாக இருக்கிறது.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர். செல்வமணி கூறியதாவது தீவிர மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மார்பு வலி ஏற்படத் தொடங்கியதிலிருந்து ஆறு மணி நேரங்களுக்குள்ளும் மற்றும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளும் சிகிச்சையளிப்பது அவசியமாகும் நேரம் செல்லச் செல்ல இரத்த உறைக்கட்டியின் சுமையும், பாதிப்பும் அதிகமாகிவிடும். இத்தகைய சூழலில், லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி மிகச்சிறப்பாக பயன்படக் கூடியதாகும். ஏனெனில், பெரிய இரத்தக் கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு திறன்மிக்க சிகிச்சையை உடனடியாக தொடங்க இது வகை செய்கிறது. இந்த சிகிச்சை முறையை நாங்கள் மேற்கொண்ட நோயாளிகளுள் ஒருவர் தீவிர மாரடைப்புடன் இங்கு சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். பெரிய இரத்தக்கட்டிகளுடன், அவரது இரத்தநாளத்தில் 99% அடைப்பு இருந்ததை ஆஞ்சியோகிராம் காட்டியது. வழக்கமான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் இத்தகைய நபர்களில் குறைந்தது 30% நபர்களுக்கு நாம் விரும்புவதை விட குறைவான சிகிச்சைப் பலன்களையே விளைவிக்கும். ஆகவே, லேசர் சிகிச்சையைப் பயன்படுத்தி அந்த இரத்தக் கட்டிகளை ஆவியாக்கி அகற்றியதால், நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை பலன்கள் உறுதி செய்யப்பட்டன என்று தெரிவித்தார்.
இந்த நவீன மருத்துவ செயல்முறை குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர்.ஜெயபாண்டியன் மற்றும் அத்துறையின் இணை நிபுணர் டாக்டர். தாமஸ் சேவியர் பால் சிங், மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் திலீப் பெர்னார்ட் அருள்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.