• Fri. May 17th, 2024

மதுரையில் உலக கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச செஸ் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Dec 22, 2023

தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேஷன் மற்றும் மதுரை வேலம்மாள் கல்வி குழுமம் இணைந்து நடத்தும் சர்வ தேச அளவிலான சதுரங்க போட்டி “செஸ் திருவிழா” மதுரை ராமேஸ்வரம் சாலையில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் வைத்து நடைப் பெறுகிறது.

வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் ஸ்ரீ.எம்.வி.முத்து ராமலிங்கம் பெயரில் நடத்தப்படும் இந்த செஸ் கோப்பைக்கான போட்டி டிசம்பர் 23 ம் தேதி (நாளை) துவங்கி 30 ம் தேதி வரை எட்டு நாட்கள் நடைப்பெற உள்ளது.

ஏ,பி,சி மூன்று பிரிவுகளில் செஸ் போட்டி நடைபெற உள்ள இந்த போட்டிகளில் சர்வதேச மாஸ்டர்களாக வேண்டும் என்ற ஆர்வமுள்ள வீரர்களுக்காகவும், திறமையான வெளிநாட்டு வீரர்களோடு மோதும் திறன்களை உருவாக்கும் வகையிலும் உருவாக்கப் பட்டுள்ளது.

வெற்றி பெறும் போட்டியாளருக்கு வேலம்மாள் தலைவர், எம்.வி.முத்துராமலிங்கம் பெயரிலான கோப்பையும், இருபது லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்பட உள்ளது.

மேலும் 30 வகையான ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக மூன்று லட்சமும், இரண்டாம் பரிசாக இரண்டு லட்சமும் இவை தவிர, நாற்பது லட்சம் மதிப்பிலான 8 மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட உள்ளது. இந்திய செஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான பரிசுகள் ஆகும்.

இது குறித்து‌ வேலம்மாள்‌ கல்வி குழும தலைவர் கூறும் போது..,

செஸ் விளையாட்டை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் அனைத்து வகையிலும் தமிழ்நாடு செஸ் கூட்டமைப்புடன் வேலம்மாள் கல்வி குழுமமும் இணைந்து தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சென்னைக்கு அடுத்தப்படியாக‌ மதுரையில் சர்வதேச செஸ் போட்டி நாளை துவங்கி ஒரு வார காலம் நடை பெற உள்ளது. இதில்
இருபது வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அதிகபட்சமாக வியட்நாமில் இருந்து ஐந்து, எகிப்தில் இருந்து நான்கு பேரும் வங்காளதேசம், இலங்கை, வியட்நாம், பிரான்ஸ், இங்கிலாந்து இந்தோனேசியா உள்ளிட்ட 20 நாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை கொல்கத்தாவைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆரோன்யக் கோஷ், மதுரை மண்ணின் மைந்தர்களான கிராண்ட்மாஸ்டர் தீபன் சக்கரவர்த்தி, முரளி கிருஷ்ணன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் விளையாட உள்ளனர்.

A ஓப்பன் கேட்டகிரி (அனைத்து வகையினரும்) B (1700மதிப்பீட்டிற்குக்
கீழே) மற்றும் C (1600 மதிப்பீட்டிற்குக் கீழே) என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

நாளை நடைபெறும் தொடக்க விழாவில் சக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பி.மாணிக்கம் மற்றும் உலக சதுரங்க சம்மேளனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீ டி.வி.சுந்தர் மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீ பி.ஸ்டீபன் பாலசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர் என்றார்.

மேலும் கூறியதாவது இந்த செஸ் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகள் என அனைத்து ஏற்பாடுகளையும் வேலம்மாள் கல்வி குழும நிர்வாகம் செய்துள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *