• Sun. May 12th, 2024

ஒண்டிபுதூரில் ரயில்வே பாலம் அமைக்க வலியுறுத்தி..,பொதுமக்கள் கருப்பு கொடி போராட்டம்…

BySeenu

Feb 7, 2024

கோவை மாவட்டம், ஒண்டிபுதூரில் ரயில்வே பாலம் அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடவு எண் 3ல் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை சிவலிங்காபுரம், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரயில்வே கேட் பகுதியில் ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 10 ஆண்டுகாலமாக இந்த கோரிக்கை இருந்து வரும் நிலையில், இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என அரசின் தரப்பில் முதலில் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் எனவும், மேம்பாலம் கட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மூன்று கி.மீ தொலைவில் உள்ள ரயில்வே கேட்டைப் பயன்படுத்தி செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதை கண்டித்தும், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சூர்யா நகர் பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் கைகளில் கருப்பு கொடியுடன் திரண்டு சூர்யா நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். மேலும் வீடுகளில் கருப்பு கட்டி ரயில்வே நிர்வாகத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழக அரசு இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் , அதுவரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற 20 தேதி ஓண்டிபுதூர் பிரதான சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *