பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தாம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வைரவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் கூறுகையில் :

பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் பெட்டியில் பெண்கள் தனியாக பயணம் செய்தால் அவர்களுக்கு பாதுகாப்பாக பெண் காவலரை அனுப்புதல், ஒவ்வொரு நடைமேடையிலும், பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளிலும் பெண்கள் தனியாக இருக்கிறார்களா, அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்கிறார்களா என சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி தெரியும் நபர்களை உடனடியாக பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் பயணிகள் பாதுகாப்பு குழு என்ற ஒரு குழுவை ஆரம்பித்து பெண்களுடைய பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் ரயிலில் பயணம் செய்யும் பெண்களை அந்த குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து உள்ளோம்.

இதில் ரயில் நிலையத்தில் இருக்கின்ற பெண் ரயில்வே பாதுகாப்பு படையினர், கல்லூரி பெண்கள் தூய்மை பணியாளர்கள், வியாபாரிகள் போன்றவர்களையும் இந்த குழுவில் சேர்த்துள்ளோம். இதன் மூலம் தவறுகளை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்க முடியும்.
மேலும் பெண் பாதுகாப்பு குறித்த கையேடுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அவசர உதவி எண், பெண்கள் பாதுகாப்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் என தெரிவித்தார்.