தூத்துக்குடியில் ரூ.750 கோடி செலவில் காற்றாலை முனையம் அமைக்கப்பட உள்ளது என்று வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் தெரிவித்தார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் சார்பில் வருகிற 27-ந் தேதி முதல் 31-ந் தேதி மும்பையில் இந்திய கடல்சார் வார விழா-2025 என்ற தலைப்பில் வர்த்தக மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கான விளக்க கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.

பின்னர் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதில் வெளித்துறைமுகம் திட்டத்திற்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டது. ஆனால் போதுமான வரவேற்பு இல்லாததால், அந்த திட்ட மாதிரியை மறு சீரமைப்பு செய்து வருகிறோம். தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வெளித்துறைமுக திட்டத்தில் மாதிரியை மாற்றி வருகிற மார்ச் மாதத்துக்குள் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இதுதவிர பசுமை மெத்தனால் சேமிப்பு மற்றும் எரி பொருள் நிரப்பும் வசதி நடந்து வருகிறது. துறைமுகத்தில் இருந்து பயணிகள் படகு சேவை தொடங்குவதற்கு சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி உள்ளது. எந்தெந்த பகுதிக்கு படகு சேவை தேவையாக உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி சேவை தொடங்கப்படும்.
கடல் காற்றாலை திட்டம் புதுப்பிக்கத்தக்க எரிசத்தி துறையால் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை முனையம் அமைக்கப்படுகிறது.