இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பதிலடியாக பஞ்சாப்பைத் தாக்க வந்த பாகிஸ்தானின் ஏவுகணையை நடுவானிலேயே இந்திய ராணுவம் அழித்தொழித்தது.
கடந்த 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முயற்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக சிந்துநதி நீர் ஒப்பந்த நிறுத்தம் உள்ளிட்ட இந்தியா பல்வேறு தடை நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கிராமத்தில் இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானின் பயங்கவாத முகாம்களை குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை இந்தியா கையில் எடுத்தது. அதன்படி நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இருநாடுகளுக்கிடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை நடத்திய எல்லை தாண்டிய பீரங்கி மற்றும் மோட்டார் ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்தனர், இந்த ஷெல் தாக்குதலால் கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டதுடன் பல வீடுகள் சேதமடைந்தது. இந்த நிலையில் பஞ்சாம் மாநிலம் அமிர்தசரசை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
அதிகாலை 1.10 முதல் 1.20 மணிக்குள் அமிர்தசரஸை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியுள்ளது. பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை இந்திய ராணுவம் நடுவானில் அழித்தொழித்தது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் பொதுமக்கள் ஒன்றுக்கு மேற்பட்டோர் பொது இடங்களில் கூட தடை செய்யப்பட்டுள்ளது. விடுப்பில் உள்ள காவலர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஏவுகணையை நடுவானிலேயே அழித்த இந்தியா
