சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், அது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “கூல் லிப்” எனப்படும் போதைப்பொருளை மாணவர்கள் பயன்படுத்துகிறீர்களா என்பதை கண்காணிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, பள்ளிகளில் மருத்துவ சோதனையின்போது மாணவர்களுக்கு போதைப்பொருள் பழக்கம் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும் என்றும் வாரத்தின் முதல் நாள் காவல்துறை ஆய்வாளர், உளவியல் நிபுணரை அழைத்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.