• Fri. Apr 26th, 2024

மது விற்பனை அதிகரிப்பு -ராமதாஸ் வேதனை..!

ByA.Tamilselvan

Oct 25, 2022
Ramadoss

தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் அரசுக்கு சாதனையல்ல, அவமானம் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளில் ரூ.259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
கடந்த ஆண்டு தீப ஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் அரசுக்கு சாதனையல்ல, அவமானம். இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.
தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்த கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *