மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தைப் பகுதியில் அமைந்துள்ள உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிதிலமடைந்து காணப்பட்ட சூழலில், கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.,

இந்த கட்டுமான பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக் குழு தலைவர் பரந்தாமன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் சட்டப்பேரவை அவைக் குழு உறுப்பினர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.,
ஆய்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை அவைக் குழு தலைவர் பரந்தாமன், மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய வருகை தந்துள்ளதாகவும், இன்று மதுரை மாவட்டத்திலும், நாளை தேனி மாவட்டத்திலும் ஆய்வு நடைபெறுவதாக தெரிவித்தார்.,

மேலும் விரைவில் உசிலம்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டுமான பணிகள் முடிவடையும் என்றும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வரும் பொதுப்பாதை சிதிலமடைந்த நிலையில் காணப்படும் சூழலில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, விரைவில் பாதை அமைக்கப்படும் என அவைக் குழு தலைவர் பரந்தாமன் பேட்டியளித்தார்.,