சந்திரகிரகணத்தை முன்னிட்டு, வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. எனவே, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
வருகிற 8-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும். 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது. இதனால் விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கிரகண நாட்களில், கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள். அதனால், அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
வரும் 8ம் தேதி திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
