• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 24, 2022

நற்றிணைப் பாடல் 49:

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,
எமரும் அல்கினர்; ”ஏமார்ந்தனம்” எனச்
சென்று நாம் அறியின், எவனோ தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?

பாடியவர்: நெய்தல் தத்தனார்
திணை: நெய்தல்

பொருள்:

எல்லாரும் உறங்கிவிட்டனர். நமக்கு நல்லநேரம். சேர்ப்பன் ஊர்க்கே சென்று அவனைப்பற்றி அறிந்துவந்தால் என்ன – தோழி தன் தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள். 
தலைவனோ தலைவிக்காக வெளியில் கேட்கும் தொலைவில் காத்திருக்கிறான். கடலலை வந்துபோகும் வெண்ணிற மணல்வெளி வளையல் குலுங்க விளையாடும் மகளிர் திரும்பிப் போய்விட்டதால் தனிமையாகிக் கிடக்கிறது. 

முடிந்து வீசிய வலையில் முகந்து கொண்டுவந்த இறால் மீன் காயும்போது கவர வரும் பறவைகளை ஓட்டி நம் பகல்பொழுது கழிந்துவிட்டது. நம்மவரும் சுறாமீன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வேட்டைக்குச் செல்லாமல் நிம்மதியாகத் தூங்கிவிட்டனர். நமக்கு நல்லநேரம். அவன் ஊர்-மன்றத்தில் புன்னை மரமும், தாழை மரமும் பூத்து மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றன. அவன் ஊர்க்கே நாம் சென்றுவந்தால் என்ன?