நற்றிணைப் பாடல் 398:
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,
ஓரை மகளிரும், ஊர் எய்தினர்
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் ”முன்,
சென்மோ, ”சேயிழை?” என்றனம்; அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல், சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய,
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே.
பாடியவர் : உலோச்சனார்
திணை : நெய்தல்
பொருள் :
அச்சம் தரும் தெய்வம் மறைந்திருக்கிறது. ஞாயிறு மேற்கில் மறைகிறது. இதுவரை நீரலையைக் கலைத்துக்கொண்டு விளையாடினோம். உன்னுடன் சேர்ந்து
ஓரை விளையாடிய மகளிர் வயிறு பசிக்கிறது என்று தம் பின்புறக் கூந்தலில் வடியும் நீரைப் பிழிந்துகொண்டு ஊருக்குத் திரும்புகின்றனர். சோலையிலுள்ள பல்வகையான நல்ல மலர்களை பார்த்துப் பாராட்டிக்கொண்டே (பழிச்சி) அவர்களுக்கு முன் நாமும் செல்லலாமா பெருமாட்டி (சேயிழை ஸ்ரீ செவ்விய அணுகலன் பூண்டவள்) என்று நான் (தோழி) கேட்டேன். அதற்கு அவள் எதுவுமே சொல்லவில்லை. அவள் மென்மையான இதயம் கொண்டவள். தன் எழிலான கண்களிலிருந்து சில நீர்த்துளிகள் வளரும் இளமுலையை நனைக்க நின்றுகொண்டே இருந்தாள். அவன் வரவுக்காக ஏங்குகிறாள். நான் என்ன செய்வேன்? தோழியின் கலக்கம்.