• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byதரணி

Aug 30, 2024
 நற்றிணைப்பாடல்:392

கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி, உழை கண் சீறூர்
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல;
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் – பானாள்,
முனி படர் களையினும் களைப நனி பேர் அன்பினர் காதலோரே.

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார் திணை: நெய்தல்

பொருள்:

கொடிய சுறாமீனை வலையிட்டுப் பிடிக்கின்ற கடிய முயற்சியுடைய தந்தை; நீர்க்காக்கைகள் ஒலிக்கின்ற பெரிய கடலின்கண் வேட்டைக்குச் செல்கின்றவன் உடன்கொண்டு செல்லானாய் நிறுத்திவிட்டுச் சென்றதனாலே; மனையின்கண் இருந்தபடி தந்தையுடன் செல்ல விரும்பி அழுதுநின்ற மெல்லிய தலையையுடைய சிறுவர்; ஆங்கு விரைய முயற்சியாலே கிடைத்த இனிய கண்ணையுடைய பனைநுங்காகிய பருத்தமைந்த விருப்பம் வரும் கொங்கையின் பயனைப்பெற்று மகிழாநிற்கும்; பனையோலையிட்டு விசித்த வேலி சூழ்ந்த அகன்ற இடத்தையுடைய சிறிய ஊரிலுள்ள நல்ல நமது மனையகத்தை நங்காதலர் அறியின்; நல்லதேயாம், அஃது அனைவேமும் விரும்பத் தக்கதொன்றாம்; எவ்வாறெனின் அத்தகைய காதலர் நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலால்; இரவு நடு யாமத்தில் நம்மை வருந்துந் துன்பத்தைப் போக்கவேண்டு மெனினும் அவ் வண்ணமே செய்யவல்லவர்காண்; அவர் தாம் செம்மாப்புற்ற உள்ளத்துடனே முன்பு வந்து நின்னை முயங்கி அகன்ற கடற்கரைச் சோலையிடத்துள்ள குறியை இப்பொழுது வந்து கண்டு நின்று அழிகின்றனர் போலும்.