• Mon. Apr 29th, 2024

இலக்கியம்

Byவிஷா

Jan 18, 2024

நற்றிணைப்பாடல்: 313

கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு யாங்கு ஆகுவம்கொல்? – தோழி! – காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும் – தோடு புலர்ந்து
அருவியின் ஒலித்தல் ஆனா கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.

பாடியவர் : தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

தினை :குறிஞ்சி

பொருள்:

தோழீ! கதிர் கொய்யும் பதம் கொள்ளநின்ற நாம் கூவிக் கிளியோப்பும் தினைப்புனமெல்லாம்; மேல் இலை காய்ந்து மலையருவி ஒலித்தாற்போல ஒலித்தல் அமையாவாயிராநின்றன; அதனால் யாம் காந்தளின் கமழ்கின்ற குலைமலர்ந்த விருப்பமிகுஞ் சாரலின்கண்ணே கூதாளி படர்ந்து மலர்ந்த நறிய சோலை தனிமையாகும்படி; கைவிட்டு ஊரிடத்து மீண்டு செல்வேம் போல எனக்குத் தோன்றாநிற்கும்; இங்ஙனமாகையில் தடைமுழுதும் அழித்துக் கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில் நாட்காலையின் மலர்ந்த மிக்க புதிய பூ பொன்னைப் பணி செய்யும் பொற்கொல்லன் உடைய கைள்னையைப் போல; மிக அழகுபொருந்திய தாழ்ந்த பலவாய கூந்தலில் அணிபெறச் சூடி; காண்பதற்கு அளவு கடந்த விருப்ப மிகுதலாலே; நம்மை இப்பொழுது கைவிட்டிருக்கின்ற தலைவனை எவ்வாறு சென்று சேர்வோம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *