• Sat. May 4th, 2024

நற்றிணைப் பாடல் 260:

Byவிஷா

Sep 29, 2023

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி: முனை எழத்
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!

பாடியவர்: பரணர்
திணை: மருதம்

பொருள்:

 வலிமையான கால்களை உடைய எருமை செங்கழுநீர்ப் பூக்களை மேய்ந்த பின்னர் நீர்ப் பரப்பில் பூத்திருக்கும் தமரைப் பூவை உண்பதில் சலிப்பு தோன்றி, தண்டுகோலில் நாற்றுகளைச் சுமந்து செல்லும் உழவர் போல கொம்பில் பூக்களை மாட்டிச் சுமந்துகொண்டு நடந்து சென்று, பக்கத்தில் வெண்மணல் குன்றில் உறங்கும் ஊரினை உடையவனே! 
என்னை விரும்புபவன் போல நடித்துக்கொண்டு என்னை அணைத்துக்கொண்டு உறங்கும் பகைவன் நீ. நான் உன் பழைய செயலை மறக்கமாட்டேன்;. அரசன் வயவன் பகைவர்களைப் போர்முனையில் அழித்தவன். அவன் தலைநகரம் இரும்பை. அது நீர்வளம் மிக்க ஊர். அந்த ஊர் போலத் தழைத்த என் கூந்தலில் 

சூடிய பூக்களை வாடச்செய்த பகைவன் நீ. அதனை நான் மறக்கமாட்டேன். இவ்வாறு பரத்தையிடம் சென்று வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *