• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருந்தங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன்ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி டாக்டர் பட்டங்களை நாளை வழங்குகிறார்.
காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா நாளை (நவ.11) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக பிரதமர் மோடி நாளை காலை பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் செல்கிறார். பல்கலைக்கழகப் பல்நோக்கு அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகிக்கிறார். 2018-19, 2019-20-ம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு பிரதமர் பட்டங்களை வழங்குகிறார். தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜா, மிருந்தங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறார். மாலை 5 மணியளவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல், காந்தி கிராமம், சின்னாளபட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகள் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளாகம் மத்திய பாதுகாப்புப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அருகே உள்ள சிறுமலை வனப் பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை, கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். நவ.10 காலை 10 மணி முதல் 11-ம் தேதி இரவு 10 மணி வரை இப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவிட போலீஸார் தடை விதித்துள்ளனர்.