பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.
பாடியவர்: மோசி கீரனார்.
பாடலின் பின்னணி:
தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவால் வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
பதலை என்னும் இசைக்கருவியை தாளத்தோடு இயக்கும் பாணர் முதலிய இரவலர்களைப் பாதுகாக்கும் தலைவனுடைய அதலை என்னும் குன்றில் உள்ள அகன்ற வாயையுடைய ஆழமான நீர்நிலைகளில் மலர்ந்த குவளை மலர்களோடு நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் உன்னுடைய மணம் கமழும் நெற்றியைத் தலைவர் மறப்பாறோ? பல முயற்சிகளைச் செய்தாலும், பாலை நிலத்தில், பல குறுக்கீடுகளால் கிடைத்தற்கரிய பொருள் முற்றிலும் கை கூடாததால் தலைவரின் பிரிவு நீடிக்காது, அவர் விரைவில் திரும்பி வருவார்.