ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.
பாடியவர்: குன்றியனார்.
பாடலின் பின்னணி:
மனைவியைப் பிரிந்து கணவன் பரத்தையரோடு வாழ்ந்து வருகிறான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்பி, தூதுவன் ஒருவனை மனைவியிடம் அனுப்புகிறான். மனைவி கணவன் மீது கோபமாக இருக்கிறாள். “அவர் அழகான இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் உடல் மெலிந்து தனிமையில் வாடுகிறேன்” என்று தன் கோபத்தையும் வருத்தத்தையும் மனைவி தூதுவனிடம் கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
வெண் சிறுகடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, சிவந்த மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து, தலைவருடைய ஊரில் உள்ள நீர்த் துறையை அழகு செய்கிறது. அவர் முன்பு தழுவிய என் தோள், என் கையில் அணிந்திருக்கும் ஓளிபொருந்திய வளையல்கள் நெகிழும்படி மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றது.