• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 48

Byவிஷா

Mar 28, 2025

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையா றோம்பென
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க வன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.

பாடியவர்: பூங்கணுத்திரையார்.
பாடலின் பின்னணி:
காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள். பூந்தாதுக்களால் செய்யப்பட்ட பாவையைக் கையில் வைத்திருக்கிறாள். நேரம் செல்லச் செல்ல வெயில் அதிகமாகிக் கொண்டிருகிறது. வெயிலின் கொடுமையால் அவள் கையில் உள்ள பாவை வாடிக் கொண்டிருக்கிறது. தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தத்துடன் காணப்படுகிறாள். அங்கு, சில பெண்கள் ஒரை என்னும் விளையாட்டை விளயாடிக்கொண்டிருக்கிறார்கள். தாதுக்காளால் செய்யப்பட்ட பாவை வாடுவதைக் கண்டு, தலைவி வருத்தத்துடன் செயலற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள், “வெயிலில் அந்தப் பாவை வாடுவது இயற்கை. ஆகவே, அதைப் பற்றிக் கவலைப்படாதே. எங்களோடு விளையாட வா.” என்று தலைவியை அழைக்கிறார்கள். தலைவியின் வருத்தத்திற்கான உண்மையான காரணம் என்னவென்று அவளுடைய தோழிக்குத் தெரியும். ”தலைவன் விரைவில் வந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினால் தலைவி அவள் கவலையைவிட்டு மகிழ்ச்சியாக இருப்பாளே.” என்று தோழி எண்ணுகிறாள்.
பாடலின் பொருள்:
”பூந்தாது முதலிய பொருட்களால் செய்யப்பட்ட, மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவை காலைப் பொழுதில் வாடுவதால் வருந்திச் செயலற்ற நிலையில் இருப்பதை தவிர்ப்பாயாக.” என்று ஒரை ஆடும் மகளிர் கூட்டம் சொல்லிய பிறகும் மிகுந்த வருத்தத்தோடு உள்ள, நல்ல நெற்றியை உடைய தலைவியின் பசலை நீங்க, இவள் விரும்பும் ஒரு சொல்லைத் தலைவர் கூறமாட்டாரோ?