• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி…!

தமிழக காவல்துறையைச் சேர்ந்த 14 உயரதிகாரிகளுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் மிகவும் முக்கியமான பிரிவான உளவுத்துறையின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற சாதனையை ஆசியம்மாள் படைத்துள்ளார்.


தற்போது 56 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார். படிப்பில் மிகவும் தேர்ந்தவரான ஆசியம்மாள் எம்.எஸ்.சி., எம்.டெக். எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணியில் சேர்ந்த ஆசியம்மாள் வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி.யாக தனது காவல்பணி வாழ்க்கையைத் தொடங்கினார்.


மகாபலிபுரம் டி.எஸ்.பி., சென்னை திருவொற்றியூர் சட்டம் –ஒழுங்கு உதவி ஆணையர், சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் போன்ற பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார், சட்டம் – ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு, உளவுத்துறை எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு, குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு பிரிவு ஆகிய பிரிவுகளில் நீண்ட அனுபவம் கொண்டவர். கடந்த 2018ம் ஆண்டு ஆசியம்மாளுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

பதவி உயர்வு பெற்ற பிறகு டி.ஐ.ஜி. ஆசியம்மாள் போலீஸ் பயிற்சி பள்ளி மற்றும் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த மே மாதம் உளவுத்துறையின் டி.ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டார். நீண்ட அனுபவம் கொண்ட ஆசியம்மாளுக்கு தற்போது தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐ.ஜி. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை வரலாற்றிலே பெண் ஒருவர் உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும்.

நேர்மையான அதிகாரியாக அறியப்படும் இவர் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையில் திறம்பட பணியாற்றிய காரணத்தால், உளவுத்துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டின் முதல் பெண் உளவுத்துறை ஐ.ஜி. என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், உளவுத்துறையின் முதல் பெண் டி.ஐ.ஜி.யும் ஆசியம்மாளே என்பது குறிப்பிடத்தக்கது.