நான் சங்கரமடத்திற்கு சென்றாலும் கூட தமிழிசை சௌந்தரராஜன் வாங்கியதை போலத்தான் நானும் சால்வை வாங்குவேன் என்றும் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சென்றிருந்தார். அப்போது விஜயேந்திரரால் அவருக்கு சால்வை வழங்கப்பட்டது. அதாவது விஜயேந்திரர் தமிழிசை சௌந்தராஜன் கையில் கொடுப்பதற்கு பதிலாக அவர் அதை தூக்கி போட்டார், அதை தமிழிசை கைகளால் ஏந்திக் கொண்டார். இந்த சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஒரு ஆளுநர் என்றும் பாராமல் இப்படித்தான் விஜயேந்திரன் அவமரியாதை செய்வாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பக்தர்களை அலட்சியமாக நடத்துவதே சங்கரமடத்தின் வாடிக்கையாவிட்டது என்றும் பலரும் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது..,
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் முறை பல ஆண்டுகளாக உள்ளது இப்போது இந்த முடிவை திமுக எடுத்துள்ளது. 1999 கூட்டணி ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்யாமல் இப்போது திமுக அதை செய்துள்ளது. இந்த விவகாரம் குடியரசு தலைவரின் முடிவை பொறுத்தது. அதை தமிழக அரசும் நடத்திகாட்டட்டும் பார்க்கலாம் என கூறினார். இதைத் தொடர்ந்து சங்கரமடத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவமதிக்கப்பட்டுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயேந்திரர் சால்வையை தெலுங்கானா ஆளுநருக்கு அளித்த விதத்தில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

இதில் ஆளுநருக்கே பிரச்சினை இல்லை என்றால் அதில் நான் கூற ஒன்றுமில்லை. எனக்கு இறை நம்பிக்கை உள்ளது. நான் சங்கரமடம் சென்றாலும்கூட சால்வையை அப்படித்தான் வாங்கிக் கொள்வேன். எனக்கு அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றார். மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசை திமுக அரசு குறை கூறக்கூடாது, நாடாளுமன்றத்திலும் திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது, சட்டமன்றத்திலும் திமுகவுக்கு மக்கள் அதிக பொறுப்பை வழங்கியுள்ளனர். அதை உணர்ந்து மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.