• Fri. Apr 26th, 2024

‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ நிதி நிறுவன மோசடி வழக்கு.., விசாரணை திருப்திகரமாக இல்லை என கவலை தெரிவித்த நீதிபதி..!

Byவிஷா

Oct 27, 2021

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என்று மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். மேலும் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டனர். இதனிடையே தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக துபாய் தம்பதி அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஹெலிகாப்டர் சகோதரர்களை கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிதி நிறுவனத்திற்கு உதவியாக செயல்பட்டதாக குறிப்பிடப்படும் சோலை செல்வம் என்பவர் ஜாமீன் கோரி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் கணேசனின் மனைவி அகிலாண்டத்தின் மீது உள்ள நிலையில், ஜாமீனில் சென்றால் அவர்களிடம் உள்ள சொத்துக்களை எவ்வாறு பறிமுதல் செய்ய முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு திருப்பி செலுத்துவது? இதனையெல்லாம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை? என்று கேள்விகளை எழுப்பினர். பின்னர் அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று கூறி, சோலை செல்வத்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *